Saturday, August 11, 2018

விடாத போலீஸ்.. இன்னொரு வழக்கில் திருமுருகன் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தது!

சென்னை: திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை உள்ளிட்ட விவகாரங்களுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்து வருபவர். சில சமயங்களில் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனையும் தமிழக அரசையும் விமர்சித்து காட்டமாக பேசி வருபவர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் திருமுருகன்காந்தி மீது உள்ளது.



தேசதுரோக வழக்கு இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியும் ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் வெளியானது. அதனால் தமிழக போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு ஒன்றினை பதிவு செய்ததுடன், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தெரிவித்து வந்தது.



எந்த முகாந்திரமும் இல்லை ஆனால் நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவரை தமிழக போலீசார் விமான நிலையத்திலேயே கைது செய்து, சென்னை கூட்டி வந்தனர். நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அவரை அடைக்க வேண்டும் என மனுவும் தந்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது" என்றார்.



எப்படி சிறையில் அடைப்பது? உடனே அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, "இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே? எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள்? ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது? எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது?" என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

24 மணி நேரம் விசாரணை நீதிபதி இப்படி கூறியதும் போலீசார், கைது செய்த 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தலாம் என்ற நடைமுறை உள்ளதால், அதன் அடிப்படையில் திருமுருகன் காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, 24 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திவிட்டு, அவரை விடுவித்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் திருமுருகன் காந்தியை எழும்பூர் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது.

வேலூர் சிறையில் அடைப்பு தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ஒரு வழக்கு திருமுருகன்காந்தி மீது உள்ளதால், அந்த வழக்கில்தான் அவரை கைது செய்து உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். அதனால், போலீஸாருடன் திருமுருகன் காந்தி வாதம் செய்தார். இருப்பினும் போலீஸார் அவரை கைது செய்வதாக கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்னொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்திைய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் புழலிலிருந்து திருமுருகன்காந்தி தற்போது வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment